காலைத் தியானம் – பிப்ரவரி 16, 2022

மத் 19: 1 – 9

ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை

                               ஆதாமுக்கென்று ஏவாளையும், ஏவாளுக்கென்று ஆதாமையும் நிர்ணயித்த ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் கணவன் யார், மனைவி யார் என்று நிர்ணயித்து வைத்திருக்கிறார். ஆண்டவருடைய திட்டத்தில் விவாகரத்துக்கு இடமேயில்லை. அவர் விவாகரத்தைக் கணவனும் மனைவியும் தெரிந்துகொள்ளும் உரிமையாக வைக்கவில்லை. இன்று விவாகரத்து சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இரண்டு முக்கிய காரணங்கள் இதற்கு உண்டு. முதலாவதாக, கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ளாமல், பணம், பதவி, அந்தஸ்து, ஜாதி, அழகு போன்றவைகளை அளவுகோல்களாக வைத்து கணவன் அல்லது மனைவியைத் தெரிந்துகொள்ளுகிறோம். இரண்டாவதாகத் திருமண வாழ்க்கையிலும் நான், என்னுடைய விருப்பம், என்னுடைய மகிழ்ச்சி என்றே நினைக்கிறோமேயல்லாமல் விட்டுக்கொடுக்கும் தன்மை நம்மிடத்தில் இல்லை. விவாகரத்து, மனிதருக்கும் தேவனுக்கும் விரோதமாகச் செய்யப்படும் பாவம். ஒருவேளை நீயோ அல்லது உனக்கு அருமையானவர்களோ விவாகரத்து செய்திருந்தால், அந்த பாவத்துக்காக ஆண்டவரிடம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையில் சுயநலத்தை மாத்திரம் மனதில் கொண்டு செய்துவிட்ட அநேகக் காரியங்களைக் குறித்து வேதனைப்படுகிறேன். என்னை மன்னியும். ஆமென்.