காலைத் தியானம் – பிப்ரவரி 19, 2022

மத் 19: 20 – 30

நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால்  

                               இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதில் பல நிலைகள் இருக்கின்றன. நித்திய ஜீவனைப் பெற நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்ட வாலிபனிடம், இயேசுகிறிஸ்து முதலிலேயே உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு என்று சொல்லவில்லை. கற்பனைகளைக் கைக்கொள்ளத்தான் சொன்னார். அவைகளைச் சிறு வயது முதல் கைக்கொள்ளுகிறேன் என்று சொன்னதால்தான், அவ்வாலிபனைப் பூரண சற்குணன் என்ற அடுத்த நிலைக்குக் கொண்டு போக இயேசு வழி சொல்லுகிறார். பணக்கார வாலிபனுக்கு அது முடியாத காரியமாக இருந்தது. பணத்தையும் பொருட்களையும் மிகவும் நேசிக்கும் ஒருவன் எப்படி தன்னைப் போல் பிறனையும் நேசிக்க முடியும்? நீ இயேசுகிறிஸ்துவை அறிந்த நாளிலிருந்து ஒரே நிலையிலிருக்கிறாயா அல்லது வளர்ந்து வருகிறாயா? பேதுருவும் மற்ற சீஷர்களும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள். தங்கள் உயிரையும் இயேசுவுக்காகக் கொடுக்கத் தயங்கவில்லை. அது மிகவும் உயர்ந்த நிலை உறவு. இயேசுகிறிஸ்துவோடுள்ள உன் உறவு எந்த நிலையில் இருக்கிறது? என்றும் குழந்தையாகவே இருந்துவிடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அனுதினமும் வளர உதவி செய்யும். ஆமென்.