காலைத் தியானம் – மார்ச் 18, 2022

மத் 26: 47 – 54

பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்       

                             பட்டயம் ஒர் ஆயுதம். அது அழிக்கும் ஆயுதம். பட்டயம் கையில் இருந்தால் அது பாதுகாப்பைத் தரும் என்று எண்ணிவிடக்கூடாது. பட்டயம் நம்மையே அழித்துவிடும். நானே ஜீவன் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவே நமக்கு உயிர் தந்து நமக்கு சுவாசத்தைக் கொடுத்து வருகிறார். அவர் மனிதருக்குக் கொடுத்துள்ள உயிரை எடுக்க அவரைத் தவிர வேறே யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இன்று தேவையில்லை என்று நினைத்தால் கருவில் இருக்கும் குழந்தையைக் கொலைசெய்து விடுவது ‘உரிமை’ ஆகிவிட்டது. காதலில் தோல்வி என்றால் கொலை, மத நம்பிக்கைகளில் வேறுபாடென்றால் கொலை, வேறே ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துவிட்டால் கொலை, அரசியலில் கொலை, சொத்துத் தகராரென்றால் கொலை, குடும்பத்திற்குள் சண்டையென்றால் கொலை என்று மனிதன் மனிதனைக் கொல்வது கர்த்தருக்கு வேதனையையும் கோபத்தையும் உருவாக்குகிறது.  எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் பட்டயத்தை எடுக்காதே.

ஜெபம்:

ஆண்டவரே, நீரே நியாயந்தீர்க்கிறவர் என்பதை உணர்ந்து, எப்பொழுதும் சாந்தமான இருதயத்தோடு வாழ எனக்கு உதவி செய்யும்.  ஆமென்.