காலைத் தியானம் – மார்ச் 23, 2022

மத் 27: 11 – 18

இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்       

                             யார் யாருக்கு முன்பாக நிற்க வேண்டியதிருந்தது என்பதைக் கவனியுங்கள். உலக மக்கள் அனைவரும் கடைசி நியாயத்தீர்ப்பின் நாளிலே யாருக்கு முன் நிற்க வேண்டுமோ, அந்த நியாதிபதியாகிய இயேசுகிறிஸ்து, பிலாத்துவின் முன் நிற்கிறார். நியாயம் விசாரித்தது யார்? நியாயம் விசாரிக்கப்பட்டது யார்? உண்மையில் நியாயம் விசாரிக்கப்பட்டது பிலாத்து தான். இயேசுவைக் குறித்து என்ன செய்கிறாய் என்பதைப் பொறுத்து உன் மீது தீர்ப்பு கூறப்படுகிறது. அவரை அலட்சியம் செய்தால், பரியாசம் பண்ணினால், அவரைப்பற்றி நினைப்பதற்கு நேரமில்லை என்று சொல்லி அவரைத் தள்ளிவிட்டால், அவரைக் குறித்து தீர்ப்பு கூறி விட்டாய் என்று அர்த்தமில்லை. உன் மீது நீயே தீர்ப்பு கூறி கொண்டாய் என்று தான் அர்த்தம். அந்த தீர்ப்பு தான் என்ன? நீ ஜீவனை இழந்து விட்டாய் என்பதே அந்தத் தீர்ப்பு. நித்திய ஜீவனாகிய அவரைத் தள்ளி விட்டால் ஜீவனை இழந்து விட்டாய் என்று தானே அர்த்தம்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்மை அலட்சியம் செய்யாமல், உம்மைத் தள்ளிவிடாமல், எப்பொழுதும் உம்மோடு நெருங்கி வாழும் பாக்கியத்தை எனக்குத் தாரும்.  ஆமென்.