காலைத் தியானம் – மார்ச் 29, 2022

மத் 27: 62 – 66

மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது

                             அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவின் அந்தரங்க சீடன் (secret disciple) என்பதை யோவான் 19:38 இல் பார்க்கிறோம். அவனும் நிக்கொதேமு என்பவனும் இயேசுவின் உடலுக்கு யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின் படி ஒரு முறையான அடக்கத்தைக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட அடக்கம் ஏதோ தற்செயலாக நடக்கவில்லை. பிதாவாகிய தேவனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு சொன்னது அவருடன் எப்பொழுதும் இருந்த அவருடைய சீடர்களுக்கு நினைவில்லை. ஆனால் அவருடைய எதிரிகள் அதை மறக்கவில்லை. ஆகையால் இயேசுவின் கல்லறைக்கு ரோம அரசாங்கத்தின் முத்திரை போடப்பட்டு, காவலாளிகளின் காவலும் கிடைத்தது. இது ஏதோ எதிரிகளின் செயல் என்று தோன்றினாலும், இதிலும் பிதாவாகிய தேவனுடைய கரம் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்ட முத்திரையும் காவலும் இருந்ததால் யாரும் இயேசுவின் உடலை அணுக முடியாத நிலை இருந்தது. கடைசியில் அதுவே இயேசுவின் உயிர்தெழுதலுக்கு ஒரு முக்கிய ஆதாரமாகவும் அமைந்தது. கர்த்தருடைய அனுமதியில்லாமல் உன் வாழ்க்கையிலும் ஒன்றும் நடக்காது.

ஜெபம்:

ஆண்டவரே, என் அனுதின வாழ்க்கையில் நடைபெறும் சிறு நிகழ்ச்சிகள் கூட உமக்குத் தெரியாமல் நடப்பதில்லை என்பதற்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.