காலைத் தியானம் – ஏப்ரல் 05, 2022

மாற்கு 2: 1 – 13

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது

                             ஆதாம் பாவம் செய்த நாள், வியாதி உலகிற்குள் வந்துவிட்டது. ஆகையால் பாவம் உலகத்தைவிட்டு நீக்கப்படும்போது வியாதியும் நீங்கும். இது பொது விதி. தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் வரும் எல்லா வியாதிக்கும் அவர் செய்த பாவம்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சில சமயங்களில் ஒருவர் செய்த அல்லது செய்கிற பாவத்திற்குரிய தண்டனை வியாதியின் உருவத்தில் வருகிறதுண்டு. நீ மனந்திரும்பி ஆண்டவரிடம் கேட்டால், உன் பாவத்தை மன்னித்து உன் வியாதியைக் குணமாக்க அவர் வல்லவராகவும், விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார். சங்கீதம் 103 என்று சொன்னவுடனேயே, என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்று ஆரம்பிக்கும் வசனம்தான் நினைவுக்கு வரும். அதே சங்கீதத்தில் 3ம் வசனத்தில், கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, நம் நோய்களையெல்லாம் குணமாக்குகிறவர் என்பதைப் பார்க்கிறோம். அதுவே தாவீது ராஜாவுக்கு, கர்த்தரைத் துதிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாயிருந்தது. ஆகையால் வியாதியாயிருக்கும்போது நாம் செய்யக்கூடிய ஜெபம், ஆண்டவரே என் பாவத்தை மன்னித்து என் வியாதியை நீக்கியருளும் என்பதே.

ஜெபம்:

ஆண்டவரே, என் மீது வியாதி என்னும் தண்டனை வராதபடி காக்கும் நாட்களுக்காகவும், உமது கிருபைக்காகவும் நன்றி சுவாமி. ஆமென்.