காலைத் தியானம் – ஏப்ரல் 06, 2022

மாற்கு 2: 14 – 21

பிணியாளிகளுக்கு வைத்தியன்

                             பிணியாளிகளுக்கு தான் வைத்தியம் தேவை. சுகமாக இருப்பவர்களுக்கு வைத்தியம் வேண்டியதில்லை. பிணியாளி சுகமாவதற்கு இரண்டு காரியங்கள் தேவை. முதலாவதாக, பிணியாளி தனக்கு வியாதி இருப்பதை உணர வேண்டும்.  ஒத்துக்கொள்ளவேண்டும். இரண்டாவதாக சுகமாக வேண்டும் என்ற விருப்பத்தோடு மருத்துவரிடம் போக வேண்டும். அப்படி செய்தால் மருத்துவர் பிணியைக் குணமாக்குவார். அதுபோல, மனிதராகிய நம் அனைவரையும் பாவம் என்ற வியாதி பிடித்துக்கொண்டது. சுகமாவதற்கு குறுக்கு வழிகள் கிடையாது.  ‘நான் பாவி’ என்பதை முதலாவதாக உணரவேண்டும். பாவத்திலிருந்து விடுதலை வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அதற்குப்பின் பாவத்தை நம் ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, அந்த பிரதான வைத்தியனிடம் நம்முடைய இதயக் கதவைத் திறக்க வேண்டும். அப்படி இதயக் கதவவைத் திறந்தவர்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம். ஒருவேளை இதை வாசிக்கும் நீ இன்னும் பாவப் பிடியிலிருந்து இரட்சிக்கப்படவில்லையென்றால் இன்றே உன் இதயக் கதவை உன் ஆண்டவருக்குத் திறந்துவிடு.

ஜெபம்:

ஆண்டவரே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும். ஆமென்.