காலைத் தியானம் – ஏப்ரல் 07, 2022

மாற்கு 2: 22 – 28

ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது

                             நம்முடைய நாட்டில், கோவில்களுக்குப் பல கிலோ மீட்டர்கள் செருப்பு கூட இல்லாமல் நடந்து செல்வது, மற்றும் நமது உடலைப் பல விதங்களில் வருத்திக் கொள்வது போன்ற செயல்களெல்லாம் நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடித் தரும் என்ற நம்பிக்கை, பரவலாக இருந்துவருகிறது.  கர்த்தர் இப்படி எதையும் செய்யச் சொல்லவில்லை. பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகள், கற்பனைகள் எதுவும் இவ்வாறாக நம்மை நாமே வருத்திக்கொள்ள கொடுக்கப்படவில்லை. அவை நம்முடைய நன்மைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. சாலை விதிகள் எப்படி நம்முடைய பாதுகாப்புக்காகவும் நன்மைக்காகவும் இருக்கின்றனவோ, அப்படியே வேதாகமத்தின் கட்டளைகளும் இருக்கின்றன. ஓய்வுநாள் உன் நன்மைக்காகவும் உன் பிள்ளைகளின் நன்மைக்காகவும் உண்டாக்கப்பட்டது. அது உன்னை நேசிக்கும் உன் ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடு. ஆலய ஆராதனையில் பங்கெடுப்பது, ஓய்வெடுப்பது, வேதத்தை வாசித்து தியானிப்பது, சன்மார்க்கப் புத்தகங்களை வாசிப்பது, அமைதியாயிருப்பது, தனித்திருப்பது, பாட்டுகள் பாடுவது, பிள்ளைகளுக்கு வேதாகமக் கதைகள் அல்லது வசனங்களைச் சொல்லிக்கொடுப்பது, வியாதியாயிருப்பவர்களையும் தனிமையாயிருப்பவர்களையும் சந்திப்பது போன்றவற்றை ஓய்வு நாளன்று செய்யலாம். நீயும் உன் குடும்பத்தாரும் ஓய்வு நாளில் என்ன செய்கிறீர்கள்?

ஜெபம்:

ஆண்டவரே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக உபயோகிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.