காலைத் தியானம் – ஏப்ரல் 10, 2022

குருத்தோலை ஞாயிறு

யோவன் 12: 12- 15

ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு       

                             இயேசு கழுதைக் குட்டியின் மேல் ஏறி பவனி சென்ற இந்த நிகழ்ச்சி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மாற்கு 11ம் அதிகாரத்திலும், லூக்கா 19ம் அதிகாரத்திலும் இது இன்னும் விரிவாக சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். சகரியா 9: 9ல் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் இந்த பவனியின் மூலம் நிறைவேறிற்று. அவர் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு கழுதைக் குட்டியின் மேல் ஏறி பவனி செல்லவில்லை. அவருடைய செய்கை தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது. அப்படியென்றால் இயேசு ஏன் இதைச் செய்தார்? இயேசுவுக்கு சிலுவையில் தம் உயிரைக் கொடுக்கும் நேரம் சமீபமாய் வந்துவிட்டதென்று தெரியும். இதுவரை தான் யார் என்பதை வெளிப்படையாக மக்கள் கூட்டத்தில் காண்பித்துக் கொள்ளாத அவர், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் எருசலேமிற்குக் கூடி வரும் அந்த பஸ்கா பண்டிகையின் சமயத்தில், அவரே இஸ்ரவேலுக்கு மாத்திரமல்லாமல் சகல உலகிற்கும் ராஜா என்பதைக் காட்ட தீர்மானித்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் கிருபையையும், இரக்கத்தையும், தாழ்மையையும் வெளிப்படுத்தும் ராஜாவாகப் பவனி வந்தாரேயல்லாமல் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் நிலைநாட்டும் ராஜாவாக வரவில்லை. இரண்டாம் வருகையின் போது அவர் நியாயந்தீர்க்கும் நியாதிபதியாக வருவார்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் வாழ்ந்து காட்டிய தாழ்மை என் வாழ்க்கையிலும் காணப்படுவதாக. ஆமென்.