காலைத் தியானம் – மே 05, 2022

மாற்கு 8: 31 – 38

தேவனுக்கு ஏற்றவைகள் . . . .மனுஷருக்கு ஏற்றவைகள்                

                             மனிதருக்கு ஏற்றவைகள் நாம் காண்கிற இந்த பூலோக வாழ்க்கை சம்பந்தப்பட்டவை. இந்த உலகில் நாம் எப்படி நம்முடைய பொருட்களையும், பணத்தையும், உறவுகளையும் பெருக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று நினைப்பதே மனிதருக்கு ஏற்றவைகளாக இருக்கின்றன. என்னுடைய மகிழ்ச்சி, என்னுடைய வருமானம், என்னுடைய குடும்பம் என்று நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதில் நம் நேரத்தையெல்லாம் செலவழித்துவிடுகிறோம். தேவனுக்கு ஏற்றவைகளோ, நித்திய வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இவ்வாழ்க்கை, பரலோக வாழ்க்கைக்கு நம்மைத் தயார் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள தருணம். தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டுள்ள நாம் தேவனுடைய குணாதிசயங்களை இவ்வுலக உறவுகளில் வெளிப்படுத்த நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தருணம். இதை சரியாகப் புரிந்து வாழ்ந்தால், வியாதியையும் துன்பத்தையும் கண்டு நாம் பயப்பட மாட்டோம். நம் கையிலிருக்கும் பணத்தையும் பதவிகளையும் மற்றவர்களின் நன்மைக்காக உபயோகிப்போம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையென்றால், அவருடைய வழிகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் சுயவிருப்பங்களை விட்டுவிட்டு உம்மைப் பின்பற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.