காலைத் தியானம் – மே 06, 2022

மாற்கு 9: 1 – 8

நாம் இங்கே இருக்கிறது நல்லது              

                             மறுரூபமான இயேசுவையும் அவரோடு பேசிய மோசேயையும் எலியாவையும் காணும் ஒரு அரிய தருணம் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருக்கும் கொடுக்கப்பட்டது. கடந்த வாரத்தில் தாம் அனுபவிக்கப்போகும் பாடுகளையும் மரணத்தையும் குறித்து இயேசு சொல்லும்போது அது சீடர்களை அச்சத்திலும் துக்கத்திலும் ஆழ்த்தியது. இப்போது, பாடுகளும் மரணமும் முடிவல்ல என்பதை இயேசு ஒரு தரிசனத்தின் மூலமாக விளக்குகிறார். மோசேயைப் போல கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் தங்கள் உடல்களோடு உயிர்த்தெழுந்து (bodily resurrection) இயேசுவோடு இருப்பார்கள் என்பதையும், எலியாவைப் போல மரணம் இல்லாமல் எடுத்துக்கொள்ளப் படுகிறவர்களும் (at rapture) இயேசுவோடு இருப்பார்கள் என்பதையும் இந்த தரிசனம் உறுதிப்படுத்துகிறது. பேதுரு அங்கேயே, அந்த மகிமையான இடத்திலேயே தங்கிவிடலாம் என்று நினைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் முதலில் பாடுகள், பின்புதான் மகிமை.  தன்னைத் தானே வெறுத்து, சிலுவையை எடுத்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றாதவன் கர்த்தருடைய மகிமையைக் காண முடியாது.  இயேசுவுக்காகப் பாடுகளை அனுபவிக்க நீ தயாரா?

ஜெபம்:

ஆண்டவரே, எனக்குக் கொடுக்கப்படும் சிலுவையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.