காலைத் தியானம் – மே 12, 2022

மாற்கு 10: 13- 22

உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு   

                           இந்த பூமியில் தனக்கென்று எதுவும் இல்லாமல் வாழ்ந்தவர் இயேசு மாத்திரமே. அவர் பிறந்த இடம் அவருக்குச் சொந்தமானது அல்ல. அவர் சவாரி செய்த கழுதையும் அவருடையது அல்ல. அவருக்கு சொந்தமான வீடு இருந்ததில்லை. ஆகையால் அவர் தங்கிய இடங்கள் அவருடையவைகள் அல்ல. 5000 மக்கள் புசிப்பதற்கு அவர் உபயோகித்த அப்பங்களும் மீன்களும் கூட அவருடையவைகள் அல்ல. பிரசங்கிக்க உபயோகித்த படகு அவருடையதல்ல. பஸ்கா பண்டிகை அனுசரித்த அறை அவருடையது அல்ல. அவர் மரித்த போது அவருடைய உடலை வைத்த கல்லறை கூட அவருடையது அல்ல. அவருடைய நாட்டமும் வாஞ்சையும் பரலோகத்தின் மேலேயே இருந்தது. ஆகையால் இவ்வுலகப் பொருட்களை அவர் நேசிக்கவில்லை. உன் வாஞ்சையும் நாட்டமும் எதின் மேல் இருக்கிறது? ஒரு நாளில் 24 மணிநேரத்தில் இவ்வுலகக் காரியங்களுக்காக நாம் செலவிடும் நேரம் எவ்வளவு? பரலோகக் காரியங்களுக்காக செலவிடும் நேரம் எவ்வளவு? உன் செல்வத்தின் மேல் உள்ள நாட்டம் உனக்கு இடறல் உண்டாக்கினால் உன் செல்வத்தைப் பிடித்துக்கொண்டு நரகத்திற்குப் போவதைப் பார்க்கிலும் செல்வம் இல்லாமல் இங்கு வாழ்ந்துவிட்டு பரலோகத்திற்கு போவது நலமாயிருக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, பரலோகத்திற்கடுத்த காரியங்களின் மேலேயே என் வாஞ்சையும் நாட்டமும் இருப்பதாக. ஆமென்.