காலைத் தியானம் – மே 17, 2022

மாற்கு 11: 12 – 19

நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்

                           தேவனுடைய ஆலயம் தேவனை ஆராதனை செய்யும் இடம். ஜெபம் செய்யும் இடம். பரிசுத்தமாக வைக்கப்பட வேண்டிய இடம். ஆசாரியர்கள் அதைப் பணம் சம்பாதிக்கும் இடமாக்கிவிட்டார்கள். அன்றைய எருசலேம் தேவாலயக் கமிற்றி மெம்பர்கள் ஆலயத்தைக் கள்ளர் குகையாக்க வேண்டும் என்ற எண்ணத்திலா வியாபாரத்தை அனுமதித்திருப்பார்கள்? இல்லை. அவர்களால் சாத்தானை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சாத்தான், “ஆலயத்தில் பலியிடத் தேவையான புறாக்களையும், அதோடு சம்பந்தப்பட்ட பொருட்களையும் தானே விற்கப் போகிறீர்கள்; அதில் தப்பு ஒன்றும் இல்லையே” என்று சொல்லியிருப்பான். கமிட்டி மெம்பர்கள் ஏமாற்றப்பட்டனர். உன் சரீரமும் தேவனுடைய ஆலயம் தானே! அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்கிறாயா? சாத்தான், “புகைபிடிப்பது தப்பு என்று வேதாகமத்தில் சொல்லப்படவில்லையே! மாம்ச இச்சை தேவனால் கொடுக்கப்பட்ட உணர்ச்சி தானே!” என்று சொல்லுவான்.  சாத்தானை அடையாளம் கண்டுகொள். உன் ஆலயம் கள்ளர் குகையாகிவிடாமல் பார்த்துக் கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் சாத்தானுடைய சத்தத்திற்கு செவிகொடாமல், என் உள்ளத்தையும் சரீரத்தையும் எப்பொழுதும் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். ஆமென்.