காலைத் தியானம் – மே 30, 2022

மாற்கு 14: 32 – 42

ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது      

                        சுயசித்தம் என்பது தேவனுடைய ஆசீர்வாதத்திற்குக் குறுக்கே நிற்கும் ஒரு பெரிய எதிரி. நம்முடைய தனிப்பட்ட காரியங்களில் மட்டுமல்லாமல், நம் குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில், ஏன் திருச்சபையில் கூட நாம் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று தானே விரும்புகிறோம்! என் மனைவி, என் சித்தத்தின்படிதான் நடக்க வேண்டும் என்று கணவன் விரும்புகிறான். கணவன் என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்று மனைவி விரும்புகிறாள். இதனால் குடும்பங்களில் எத்தனை சண்டைகள்! தேவ வழிநடத்துதலுக்காக ஜெபிக்கும்போது கூட, ஆண்டவரே இது தான் என் விருப்பம் (சுய சித்தம்), இதை அங்கீகரியும், என்றுதானே ஜெபிக்கிறோம். தேவசித்தம் தான் நம்முடைய சித்தமாக இருக்க வேண்டும். முற்றிலும் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தால் அதற்குரிய ஆசீர்வாதம் நிச்சயமாக உண்டு. தேவசித்தம் சிலுவைக்கு வழி நடத்தினாலும் பயப்படவேண்டாம். சிலுவைக்குப் பின் மகிமையான உயிர்த்தெழுதல் நிச்சயமாக உண்டு.   

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் உம்முடைய சித்தத்தை அறிந்து செயல்பட எனக்கு உதவி செய்யும். ஆமென்.