காலைத் தியானம் – ஜூன் 01, 2022

மாற்கு 14: 55 – 59

கொலை செய்யும்படி … சாட்சி தேடினார்கள்       

                        ரோமர்கள் யூதர்களை அடிமைப்படுத்தி அவர்களை அரசாண்டு வந்தது அநியாயம் என்றாலும் அந்த ஆட்சியிலும் ஒரு ஒழுங்கும் நீதியை நிலைநாட்டும் முறையும் இருந்தது. ஒருவனுடைய செயல் சட்டத்திற்கு விரோதமானது என்பதைக் கண்டறிந்தால் அதற்கேற்ற தண்டனையை அவன் பெறவேண்டும் என்பதில் ரோமர்களின் சட்டம் தெளிவாக இருந்தது. இருந்தாலும் யூதர்களின் மதம் சம்பந்தப்பட்ட சட்டங்களை அவர்கள் புறக்கணிக்கவில்லை. ஆகையால்தான் பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவை நியாயந்தீர்ப்பதாக ஒரு நாடகத்தை நடத்த முடிந்தது. அதாவது திருச்சபைத் தலைவர்கள் ஆயுதங்களோடு அடியாட்களை அனுப்பி இயேசுவைப் பிடித்துக் கொண்டு வந்து, தங்களுடைய பதவிக்கும் சமுதாய அந்தஸ்துக்கும் எந்த ஆபத்தும் வராதபடி ஒரு தீர்ப்பு செய்ய ஆயத்தமானார்கள்.  ஒருவன் சட்ட விரோத செயலில் ஈடுபட்டால், செயலுக்கேற்ற தண்டனையைக் கொடுப்பதுதானே முறை! திருச்சபைத் தலைவர்களோ தண்டனையை முடிவு செய்துவிட்டு அதற்கேற்ற குற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். பொய்ச்சாட்சிகளைத் தயார்செய்தார்கள். ஒன்பதாவது கற்பனையைக் குறித்து அவர்களுக்குக் கவலையேயில்லை. உலக மக்கள் அனைவரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாகிய இயேசுவையே நியாயந்தீர்க்க முற்பட்டார்கள். 

ஜெபம்:

ஆண்டவரே, எனக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, உமக்கு விரோதமான செயலில் ஈடுப்பட்டுவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.