காலைத் தியானம் – ஜூன் 02, 2022

மாற்கு 14: 60 – 65

நான் அவர்தான்       

                        இயேசு திரியேக தேவனில் ஒருவர் என்பதை ஏற்க மறுக்கும் அநேகர், இயேசு தன்னைக் கடவுள் என்று ஒருபோதும் சொல்லவில்லையே என்று சொல்வதுண்டு. அது தவறு. நீர் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று அன்றைய ஆலயத் தலைவர்கள் கேட்டபோது, நான் அவர்தான் என்று இயேசு சொன்னார். இதற்கும் வேறுவிதமாக விளக்கம் கொடுப்பவர்கள் உண்டு. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு, பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். நாமும் அப்படித்தானே ஜெபிக்கிறோம். ஆகையால் நாமும் தேவனுடைய குமாரர்தானே! இது உண்மையென்றால் இயேசு நம்மைப் போன்ற ஒரு மனிதன் தானே என்று விவாதிக்கிறவர்கள் உண்டு. இன்று வாசித்த பகுதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சில உண்மைகளை அவர்கள் கவனிப்பதில்லை.  இயேசு, நானும் உங்களைப் போன்ற  தேவனுடைய குமாரர்களில் ஒருவன் என்ற அர்த்தத்தில் சொல்லியிருந்தால், பிரதான ஆசாரியன் ஏன் தன் ஆடையைக் கிழித்துக் கொண்டு, இயேசு சொன்னது  தேவதூஷணம் என்று அவர்மீது குற்றம்சாட்டவேண்டும்? ஏன் அந்த தேவதூஷணம் மரண தண்டனைக்கு ஏதுவானது என்று சொல்லவேண்டும்? மேலும் 62வது வசனத்தில், இயேசு, தான் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் குறித்தும், தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தும் வெளிப்படையாக சொல்லுகிறார். இயேசு திரியேக தேவனில் ஒருவர் என்பதை உறுதிப்படுத்த இதற்கு மேல் என்ன அத்தாட்சி வேண்டும்?

ஜெபம்:

ஆண்டவரே, உம்மைக் குறித்து சந்தேகங்களோடு வருகிறவர்களுக்கு உம்முடைய வசனத்தை விளக்கிக் கூற தேவையான ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.