காலைத் தியானம் – ஜூன் 05, 2022

மாற்கு 15: 16 – 32

அவரைப் பரியாசம்பண்ணின பின்பு       

                        யாரெல்லாம் இயேசுவைப் பரியாசம்பண்ணினார்கள் என்பதைக் கவனியுங்கள். போர்ச்சேவகர்கள் அவரைத் துன்புறுத்தி பரியாசம்பண்ணினார்கள். அவர்களுக்குக் கொலை செய்வது தொழில். அந்த போர்ச்சேவகர்கள், கொலையை ஒரு விளையாட்டைப் போல எளிதாக்கிக்கொண்டால்தான் அது தங்களுடைய மனதைப் பாதிக்காது என்று பயிற்சி பெற்றிருக்கக் கூடும். சிங்கங்களின் மத்தியில் அகப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போல அவர் குதறப்படுகிறார். வழிப் போக்கர்களும் அவரைப் பரியாசம்பண்ணினார்கள். அவர்கள் என்ன நடந்தது என்பதை அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்கள். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூட அவரைப் பரியாசம்பண்ணினார்கள். அவர்களுடைய பரியாசத்தில் அவர்களுடைய ஆணவம் வெளிப்பட்டது. சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளனும் அவரைப் பரியாசம்பண்ணினான். அது, நீயும் என்னைப் போன்ற ஒரு குற்றவாளிதானே என்ற இழிவான மனப்பான்மையுடன் செய்யப்பட்ட பரியாசம். இயேசு ஏன் இப்படிப்பட்ட பரியாசத்தையும் அவமானத்தையும் கடந்து சென்றார்? நீயும் நானும் அநியாயமாய்  துன்பங்களையும் அவமானத்தையும் எதிர்கொள்ளும்போது,  நம்மை விட பல மடங்கு அதிகமாக அவைகளை அனுபவித்தவர், மரணத்தையும் வென்று நம் பக்கத்தில் நிற்கிறார் என்பதை உணர்வதற்காகவே.

ஜெபம்:

ஆண்டவரே, அநியாயமாய் அவமானத்தை எதிர்கொள்ளும்போது நீரே எனக்குத் துணையாயிரும். ஆமென்.