காலைத் தியானம் – ஜூன் 06, 2022

மாற்கு 15: 33 – 39

தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது       

                        தேவாலயத்தின் திரைச்சீலை, கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் மகா பரிசுத்த இடத்தை, பாவம் நிறைந்த மனிதர் இருக்கும் பொது இடத்திலிருந்து பிரித்துக் காட்டியது. மகா பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியன் மாத்திரம், அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம், செல்லமுடியும். இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமானால், தேவாலயத்தின் திரைச்சீலை மகா பரிசுத்தமான கர்த்தருக்கும் பாவம் நிறைந்த மனிதருக்கும் நடுவே இருந்த திரை. இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த போது அந்தத் திரை கிழித்து எறியப்பட்டது. இயேசு என்னும் அந்த பலி, பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி இயேசுவிடம் செல்கிறவர்கள் அனைவரையும் பாவத்திலிருந்து தூக்கி எடுத்து, கழுவி, பாவமே செய்யாதவர்கள் போல பரிசுத்தப்படுத்திவிடுகிறது. மகா பரிசுத்தமுள்ள தேவனை நாம் நேரில் அணுக, இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் வழி உண்டாக்கிவிட்டது. மறுபடியும் உன் பாவ வாழ்க்கைக்குத் திரும்பி, உனக்கும் உன் ஆண்டவருக்கும் நடுவே ஒரு திரையை உண்டாக்கிக் கொள்ளாதே.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பாவியாகிய எனக்கும் கொடுத்ததற்காக நன்றி சுவாமி. ஆமென்.