காலைத் தியானம் – ஜூன் 07, 2022

மாற்கு 15: 40 – 47

பிலாத்துவினிடத்தில் துணிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்       

                        இதன் பின்னணியை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்து செய்ய ஆரம்பித்த ஊழியம் ஒரு இயக்கமாக மாறியது. போகுமிடமெல்லாம் ஒரு பெரிய மக்கள் கூட்டம் அவரைப் பின்பற்றியது. அவரை இப்படியே வளரவிட்டால் தங்களுடைய அரசாட்சிக்குப் பிரச்சனை வந்துவிடுமோ என்று ரோமர்கள் பயந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையையும், ஏற்படுத்தி வைத்திருந்த சட்டதிட்டங்களையும் உடைத்தெறியும் இயேசுவைப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் வெறுத்தனர். இயக்கத் தலைவனைக் கொன்றுவிட்டால் இயக்கம் தானாக செத்துவிடும் என்ற எண்ணத்தில் இயேசுவைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டார்கள். (இயேசு தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார் என்பதை அவர்கள் அறியவில்லை.) அந்த நேரத்தில் இயேசுவோடு இருந்தவன் என்று காட்டிக்கொண்டாலே உயிருக்கு ஆபத்து இருந்திருக்கும். இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ண அவரோடு நெருங்கி இருந்த (மீதியாயிருந்த) 11 சீடர்களில் ஒருவரும் முன்வரவில்லை. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இயேசுகிறிஸ்துவின் சரீரத்துக்கு மரியாதை செய்ய முன்வந்தான். உனக்கு அப்படிப்பட்ட துணிச்சல் உண்டா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் சொல்லும் வேலையிலுள்ள ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மன உறுதியை எனக்குத் தாரும். ஆமென்.