காலைத் தியானம் – ஜூன் 15, 2022

லூக்கா 2: 1 – 7    

சத்திரத்தில் அவருக்கு இடமில்லாதிருந்தபடியால்  

                      இன்றைய சூழ்நிலையில் ரயில்வே மந்திரிக்கு ரயிலில் பயணம் செய்ய இடமில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படியே டிக்கெட் பதிவு செய்யும் ஒருவன், மந்திரிக்கு இடமில்லை என்று சொன்னால் அவனுடைய நிலை என்னவாகும்? வானத்தையும் பூமியையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உருவாக்கிய கர்த்தர் பூமியில் மனிதனாக பிறப்பதற்கு ஒரு சத்திரத்தில் (பயணிகள் தங்குமிடத்தில்) கூட இடமில்லை என்ற நிலை ஏற்பட்டது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் உள்ளே வராதே என்று சொல்லும் இடத்தில் கட்டாயப்படுத்தி உள்ளே நுழைவது அவருடைய குணம் அல்ல. இன்றும் இயேசுகிறிஸ்துவின் ஒருசில போதனைகளை ஏற்றுக் கொள்ளும் பல மக்கள், அவர்  “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று சொன்னதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர் இதயக் கதவுக்கு வெளியே நின்றுதான் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறந்து அவரை உள்ளே விடுவதும் விடாததும் நம்முடைய முடிவு.

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளக் கதவு உமக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கிறது. உள்ளேயே தங்கியிரும். ஆமென்.