காலைத் தியானம் – ஜூலை 30, 2022

லூக்கா 11: 14 – 26

பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு

                    அசுத்த ஆவியை விரட்டியடித்தவுடன் வேலை முடிந்து விடவில்லை. சுத்தமாக்கிய வீட்டைக் காலியாக வைக்க முடியாது. வீட்டில் யாராவது குடியிருக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை உன் உள்ளத்தில் குடியிருக்க வைக்காவிட்டால், கெட்ட சிந்தனைகள் புகுந்து உன் உள்ளத்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியாது. நல்ல பத்திரிகைகளை வாசிப்பதிலும், நல்ல புத்தகங்களை வாசிப்பதிலும் உன் நேரத்தை உபயோகிக்க வேண்டும். நல்ல நண்பர்களோடு மட்டும் தோழமை வைத்துக் கொள்ள வேண்டும். உன் உள்ளத்தை வெறுமையாக வைக்க வேண்டாம். யுத்தத்திற்குப் போக வேண்டிய நேரத்தில் யுத்தத்திற்குப் போகாமல், உள்ளத்தைக் காலியாக வைத்துக் கொண்டு, உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்த தாவீது ராஜாவின் உள்ளத்திலேயே அசுத்த ஆவி புகுந்துவிட்டது. நீயும் நானும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளத்தை நல்ல எண்ணங்களாலும், என் உடலை நற்கிரியைகளினாலும் நிரப்பி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.