காலைத் தியானம் – ஆகஸ்ட் 07, 2022

லூக்கா 12: 41 – 50

எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்

                    நாம் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த மொழி பேசப்படுமிடத்தில், எந்த குடும்பத்தில், எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பவைகளில் ஒன்றைக்கூட தெரிந்துகொள்ளும் உரிமை நமக்குக் கொடுக்கப்படவில்லை. அவை எல்லாமே நம்முடைய ஆண்டவர் தெரிந்தெடுத்து கொடுத்தவை. அவர் உன்னை வைத்துள்ள இடத்தில் நீ பெற்ற நன்மைகளை நினைத்துப் பார்த்ததுண்டா? உனக்கு அவர் அதிகமாய் கொடுத்துள்ளார் அல்லவா? அநேகருக்கு இல்லாத சிலாக்கியம் உனக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் உன்னிடத்தில் ஆண்டவர் அதிகம் எதிர்பார்க்கிறார் என்பதை மறந்து விடாதே. பணம், பதவி, படிப்பு, தொழில், இசைஞானம், பேச்சுத்திறமை, எழுதும் திறமை இப்படி எத்தனையோ ஆசீர்வாதங்கள்!  உன்னிடத்தில் நிச்சயமாக அதிகம் கேட்கப்படுகிறது. நீ கொடுத்து வருகிறாயா? உன் ஆண்டவர் எதிர்பார்க்கும் அளவு கொடுத்து வருகிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்துள்ள தாலந்துகளையும், ஆசீர்வாதங்களையும் உம் பணிக்கே அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.