காலைத் தியானம் – ஆகஸ்ட் 19, 2022

லூக்கா 16: 1 – 10

உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் 

                    கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களில் நண்பர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நண்பர்கள் நம்மை நேசிப்பவர்கள். ஆபத்துக் காலத்தில் அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு உதவி செய்ய முன் வருபவர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் ஆயிரம் பேரின் நட்பை விட மேலான நட்புதான் நம் இரட்சகரின் நட்பு. இவ்வுலக நட்பின் ஆழம், நண்பர்கள் வெவ்வேறு ஊர்களுக்குப் பிரிந்து செல்லும்போது குறைந்து விடுகிறது. சில சமயங்களில் நம் உயிர் நண்பன் என்று நாம் நினைப்பவன் கூட நம்மைக் கைவிட்டு விடுகிறான். ஒருபோதும் கைவிடாத நட்புதான் நம் இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் நட்பு. இந்த வாழ்க்கையிலும் பரலோக வாழ்க்கையிலும் நம்முடனேயே இருக்கும் நண்பர் தான் இயேசுகிறிஸ்து. அவருடைய நட்பு உனக்கு உண்டா? What a friend I have in Jesus என்று உன்னால் சொல்ல முடியுமா?

ஜெபம்:

ஆண்டவரே, எனக்காக உயிரைக் கொடுத்த உமது அன்பையும் நட்பையும் பெற நான் பாத்திரன் அல்ல. இருந்தாலும் உமது நட்பு இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நண்பனாயிரும். ஆமென்.