காலைத் தியானம் – ஆகஸ்ட் 21, 2022

லூக்கா 16: 19 – 31

நீ பூமியில் உயிரோடிருக்கும் காலத்தில் 

                    பூலோக வாழ்க்கைக்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு என்பது நமக்குத் தெரியும். அதுதான் நித்திய வாழ்க்கை. நாம் பூமியில் உயிரோடிருக்கும் காலம், நித்திய, பரலோக வாழ்க்கைக்காக நம்மைத் தயாராக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டிருக்கும் காலம். நமக்கு முன் இவ்வுலகை விட்டு நம் ஆண்டவரின் பிரசன்னத்திற்குக் கடந்து சென்று விட்ட நமக்கு அருமையானவர்களைக் குறித்து நம் மனதில் அநேகக் கேள்விகள் எழும்புவதுண்டு. அவர்கள் எங்கிருப்பார்கள்? அவர்களுக்கு நம்மைப் பற்றிய எண்ணம் இருக்குமா? இந்த கேள்விகளுக்கு விடையை இன்று வாசித்த பகுதியில் பார்க்கிறோம். இவ்வுலகை விட்டு கடந்து சென்றுவிட்ட நமக்கு அருமையானவர்கள், நம்மைப் பற்றி நினைத்தாலும் கவலைப்பட்டாலும் நம்முடைய இரட்சிப்புக்காக அவர்கள் எதுவும் செய்ய முடியாது என்பது வேதத்தில் தெளிவாக இருக்கிறது. உனக்கு இப்பூமியில் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்களை வீணாக்கி விடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய பூலோக நாட்கள், பரலோகத்திற்கு என்னையும் என்னைச் சுற்றியிருப்பவர்களையும் தயாராக்குவதற்கு உபயோகப்படுவதாக. ஆமென்.