காலைத் தியானம் – ஆகஸ்ட் 24, 2022

லூக்கா 17: 22 – 37

நோவாவின் நாட்களில் . . . லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும் 

                    நோவாவின் நாட்களிலும், லோத்தின் நாட்களிலும் என்ன நடந்தது? அநியாயங்களும் அக்கிரமங்களும், மக்களின் பாவ வாழ்க்கையும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. இன்றும் அப்படித்தான் இருக்கிறது! கர்த்தருக்குப் பயந்து தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஒரு சிலரே. இன்றும் அப்படித்தான் இருக்கிறது! நோவாவைப் போல, பாவ வாழ்க்கையைக் குறித்து கடிந்து பேசியவர்களும் வரப்போகும் அழிவைப் பற்றி பேசியவர்களும் பரிகாசம் பண்ணப் பட்டார்கள். இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது! இன்று இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவன், வேதாகமத்தின் அடிப்படையில், ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், அல்லது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது தவறு என்று சொன்னால், அல்லது விவாகரத்து செய்வது பாவம் என்று சொன்னால், அவன் ஒரு முற்போக்கு சிந்தனையில்லாதவன் என்றும் இன்றைய உலகத்துக்கு உதவாதவன் என்றும் கருதப்படுகிறான். கர்த்தர் இன்றும் எச்சரிப்புகளை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். எச்சரிப்புகளை அசட்டை செய்யாதே.

ஜெபம்:

ஆண்டவரே, எச்சரிப்புகளை அசட்டை செய்யாமல், காலத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.