காலைத் தியானம் – ஆகஸ்ட் 26, 2022

லூக்கா 18: 9 – 17

தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்  

                     இந்த உண்மையைத் தவறாகப் போதிக்கிறவர்களும், புரிந்து கொள்கிறவர்களும் அநேகர் உண்டு. நாம் உயர்த்தப்பட வேண்டுமென்ற  குறிக்கோளுடன் நம்மைத் தாழ்த்த முடியாது. அப்படி முயற்சி செய்வது வெளித்தோற்றத்தில் மட்டும் காட்டப்படும் வேஷமாகத்தான் இருக்கமுடியும். ஆகையால்தான் அநேகத் தருணங்களில் நம் வார்த்தைகள் மிகவும் தாழ்மையாக இருப்பது போலத் தோன்றினாலும், நம்முடைய இருதயத்தில் உண்மையான தாழ்மை இருப்பதில்லை. கர்த்தர் உன் இருதயத்தைப் பார்க்கிறவர். உயர்த்தப்படுவது தாழ்மையின் விளைவு (consequence). குறிக்கோள் அல்ல. பரிசேயன் தேவனுடைய சமூகத்தில் பெருமையோடு காணப்பட்டான். ஆயக்காரனிடம் தாழ்மை காணப்பட்டது. ஆயக்காரன், தான் உயர்த்தப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு தாழ்மையாகத் தோன்றும் வார்த்தைகளைப் பேசவில்லை. நாம் பெருமையை விட்டு விலக வேண்டும்.  மற்றவர்களை விட நாம் பரிசுத்தவான்கள் அல்லது நல்லவர்கள் என்ற மனநிலையைக் கைவிடவேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் மீட்கப்பட்ட பாவி என்பதை உணர்ந்து உம்முடைய சமூகத்திலே என்னை அர்ப்பணிக்கிறேன். என்னை வழி நடத்தும். ஆமென்.