லூக்கா 18: 23 – 27
மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்
ஐசுவரியவானாயிருந்த தலைவனுக்குத் தன் செல்வத்தை விட்டுப் பிரிய மனதில்லை. உன் மனதெல்லாம் உன் செல்வத்தின் மீது இருந்தால் பரலோகத்தில் உனக்குப் பங்கு இல்லை என்பது இயேசுவின் போதனை. இயேசுவிடம் வந்த அந்த தலைவன், எல்லா கற்பனைகளையும் கைக்கொள்ளுகிறேன் என்று சொன்னான். அதுதான் உண்மை என்றும் அவன் நினைத்தான். ஆனால் அவன் முதல் கற்பனையைக் கூட கைக்கொள்ளவில்லை! என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்பது முதலாம் கற்பனை. பணக்காரத் தலைவனோ தன்னுடைய செல்வத்தை தெய்வமாக வணங்கிவந்தான். சிலருடைய வாழ்க்கையில் பல தலைமுறைகளாகப் பழகிவிட்ட சில தவறான பழக்கங்களைத் தூக்கி எறிந்து விட்டு, இயேசுவைப் பின்பற்றுவது கூடாத காரியமாக இருக்கிறது. அவற்றை முறிக்க வேண்டுமானால் தேவனுடைய கிருபை தேவை. அதற்காக ஜெபியுங்கள்.
ஜெபம்:
ஆண்டவரே, எங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கைகளில் தகர்க்கப்பட வேண்டிய கோட்டைகள் அநேகம் உண்டு. அது உம்மாலே மாத்திரம்தான் முடியும். இரக்கமாய் கிரியை செய்யும். ஆமென்.