காலைத் தியானம் – ஆகஸ்ட் 31, 2022

லூக்கா 19: 1 – 10

இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் 

                    இஸ்ரவேலரை அடிமைப் படுத்தி அரசாண்டு வந்த ரோம அதிகாரிகள், சகேயு போன்ற யூதர்களையே வரி வசூலிப்பதற்கு உபயோகித்து வந்தார்கள்.   தங்களில் ஒருவனே தங்களுக்கு விரோதமாக, ரோமர்களுக்குச் சாதகமாக, அநியாயமாய்ச் செயல்படுகிறானே என்று யூதர்கள் அனைவரும் சகேயுவை வெறுத்தார்கள். மேலும் யூதர்கள் அவனைப் பாவி என்று ஒதுக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட சகேயு, இயேசுவைப் பார்க்கவேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டான். ஆனால் அவனுக்கு அவரைத் தன் வீட்டிற்கு அழைக்கவேண்டும் என்ற எண்ணமே இருக்கவில்லை.  இயேசுவோ, அவனைப் பார்த்து பேசியது மாத்திரமல்லாமல், நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னார். எல்லாராலும் பாவி என்று ஒதுக்கப்பட்டவனை இயேசு அரவணைத்துக் கொண்டார். உன் குடும்பத்தினரும் உன் சமுதாயமும் உன்னைப் பாவி என்று ஒதுக்கி வைக்கலாம். ஆனால் இயேசுவோ உன் உள்ளத்தைப் பார்க்கிறார். உன் உள்ளத்தின் வாஞ்சையின்படி உன்னிடத்திற்கு வந்து உன்னை இரட்சிப்பார். உன் வாஞ்சை எப்படிப்பட்டது?

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளத்தின் விருப்பங்களும் வாஞ்சைகளும் உமது கிருபைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன. என்னை இரட்சித்து அரவணைத்துக் கொள்ளும். ஆமென்.