காலைத் தியானம் – செப்டம்பர் 21, 2022

லூக்கா 22: 63 – 71

நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்ப மாட்டீர்கள்     

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில், ஒரு நாள் என் வகுப்பு மாணவர்களில் சிலர், என் வகுப்பு ஆசிரியருக்குத் தெரியாமல் அவருக்கு மிகவும் கோபம் உண்டாக்கும் வகையில் ஒரு குறும்புச் செயலைச் செய்துவிட்டார்கள். குறும்பு செய்தவர்களை யாரும் காட்டிக் கொடுப்பதாக இல்லை. ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா? வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் முந்தின நாள் நடத்திய விஞ்ஞான பாடத்திலிருந்து கேள்விகளைக் கேட்டார். ஒரு மாணவன் ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லிவிட்டால் அவன் தெரியாது என்று சொல்லும் வரை அவனிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசியில் வகுப்பிலிருந்த எங்கள் அனைவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. ஆசிரியர், மாணவர்களின் புரிதலைத் தெரிந்துகொள்வதற்காகக் கேள்விகளைக் கேட்கவில்லை. அவர்களைத் தண்டிக்கவே கேள்விகள் கேட்டார். இன்று வாசித்த வேதாகமப் பகுதியில், பிரதான ஆசிரியரும் வேதபாரகரும் இயேசுவை நோக்கி, நீர் கிறிஸ்துவா?. . . . .  நீர் தேவனுடைய குமாரனா? என்று கேள்விகளைக் கேட்டதின் நோக்கம், இயேசு யார் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. நாம்கூட மிகவும் கடினமான துன்பங்களையும் தாங்கமுடியாத துக்கங்களையும் எதிர்கொள்ளும் நேரங்களில், ஆண்டவரே எனக்கு ஏன் இந்த துன்பம் என்று கேட்கிறோம் அல்லவா? அப்படிப்பட்ட கேள்வியின் நோக்கம் என்ன?

ஜெபம்:

ஆண்டவரே, என் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு கேள்வியைக் குறித்தும் நான் கவனமாயிருக்கும்படி, எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.