யோவான் 1: 15 – 28
நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்
இயேசுவின் பூலோக வாழ்க்கையில் அவரோடு தொடர்பிலிருந்தவர்களில் அநேகர் அவரை அறிந்து கொள்ளவில்லை. மக்களின் நடுவே இருந்தவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை என்பது வேதனை தரும் காரியம். நம்முடைய நிலையும் அதுதானோ? இயேசு நம் மத்தியிலும் இருந்து, நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவருடைய சரீர பிரசன்னம் இன்று நம் மத்தியில் இல்லை. ஆனால் உயிர்த்தெழுந்த இயேசுவின் பிரசன்னத்தை அவரைத் தேடுகிறவர்கள் அனைவரும் உணர முடிகிறது என்பதில் சந்தேகமே இல்லை. காதுகள் இருந்தும் கேட்காமலும், கண்கள் இருந்தும் பார்க்காமலும்தான் நாம் இருக்கிறோமோ? அனுதினமும் வேத வசனங்களின் மூலமாகவும், நம்முடைய நண்பர்களின் மூலமாகவும், நாம் வாசிக்கும் புத்தகங்களின் மூலமாகவும், கேட்கும் பிரசங்கங்களின் மூலமாகவும், வியாதிகளின் மூலமாகவும், ஆண்டவரின் சகல படைப்புகளின் மூலமாகவும் அவர் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார். அனுதினமும் பேசிக்கொள்ளும் ஒரு நண்பராகவும், இரட்சகராகவும், வழிகாட்டியாகவும் உனக்கு அவரைத் தெரியுமா? அவர் சத்தத்தைக் கேட்கிறாயா? (எபேசியர் 1:18 19; லூக்கா 24: 31)
ஜெபம்:
ஆண்டவரே, உம்மை அறியும்படி என் கண்களையும் காதுகளையும் திறந்தருளும். ஆமென்.