யோவான் 2: 12 – 25
என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதீர்கள்
ஆலயம் தேவனுடைய வீடு. தேவனை ஆவியோடும் உண்மையுடனும் தொழுது கொள்ளும்படி பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ள இடம். ஆலயம் பரிசுத்தமாகக் காக்கப்படவேண்டிய இடம். பலியிடுவதற்குத் தேவையான ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை ஆலயத்திலேயே விற்றுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட இயேசு, கோபப்பட்டு, சாட்டையைக் கையில் எடுத்து விட்டார். இன்று, அநேக இடங்களில் ஆலயங்களையே வியாபாரமாக்கி விட்டோம். ஆலய நிர்வாகத்தில் வியாபாரம். ஆலய நிர்வாகக் குழு தேர்தலிலும் வியாபாரம். ஆலயத்தைச் சேர்ந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர் மாணவியர்களைச் சேர்ப்பதில் வியாபாரம். ஏன், சில இடங்களில் பேராயர் தேர்தலில் கூட வியாபாரம். இன்றைய வியாபார நிலையைக் கண்டு கருணை மிகுந்த நம் இயேசு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று ஒதுங்கிக் கொள்ளாமல், ஆலயத்தைப் பரிசுத்தமாகக் காக்கும் பணியில் ஈடுபடுவாயா?
ஜெபம்:
ஆண்டவரே, ஆலயம் என்ற பெயரில் நடக்கும் வியாபாரங்களை அழித்துப் போடும். எங்களையும் எங்கள் ஆலயங்களையும் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளும். ஆமென்.