காலைத் தியானம் – அக்டோபர் 28, 2022

யோவான் 7: 45 – 53

அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை

                           இயேசுவைக் குறித்து மக்கள் பலவிதமாய் பேசினார்கள். அவர் நல்லவர் (7: 12).  அவர் ஜனங்களை வஞ்சிக்கிறவர் (7: 12).  வேத எழுத்துக்களை அறிந்திருக்கிறவர் (7:15). பிசாசு பிடித்தவர் (7:20). கிறிஸ்து (7:26). தீர்க்கதரிசியானவர் (7:40). எத்தனை வித்தியாசமான பட்டங்கள்! நீ இயேசுவை யார் என்று சொல்லுகிறாய்? அவரைக் கைதுசெய்யச் சென்ற  சேவகர், அவர் பேசியதைக் கேட்ட பின், கைது செய்யாமல் திரும்பி விட்டார்கள். இயேசுவை நல்லவர், கிறிஸ்து, தீர்க்கதரிசி என்று கூறியவர்கள்கூட எல்லார் முன்னிலையிலும் இயேசுவுக்காகப் பரிந்து பேசவில்லை. இயேசுவுக்காக எழுந்து நிற்கவில்லை. நம் நிலையும் அப்படிப்பட்டதுதானே! ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்தில் விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். ஆலயத்தை விட்டு வெளியே வந்த பின், நாம் வேலை செய்யும் இடத்தில் நம் விசுவாசத்தைப் பற்றி பேச வெட்கப்படுகிறோம். இயேசுவுக்காக எழுந்து நிற்க வெட்கப்பட வேண்டாம். (மத்தேயு 10: 32, 33)                                       

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உம்மைப் பிரதிபலிக்கும் ஒளியாக இருக்கட்டும். உம்மைக் குறித்து பேச, ஒருபோதும் நான் வெட்கப்படாதபடி எனக்கு தைரியத்தைத் தாரும். ஆமென்.