காலைத் தியானம் – செப்டம்பர் 20, 2023

குறிப்பு: மூன்றே வசனங்களில் (2 கொரி 3:4-6ல்) பல ஆழ்ந்த சத்தியங்கள் புதைந்துள்ளன. நாம் இந்த வசனங்களை நிதானித்து தியானிப்பது அவசியம் என்பதால் இன்றும், அடுத்த சில நாட்களும், ஒரு வசனத்தையோ அல்லது ஒரு வசனத்தின் ஒரு பகுதியையோ மாத்திரம் தியானிக்கப் போகிறோம். நாள் முழுவதும் இந்த உண்மைகளை நினைத்து, பரிசுத்த ஆவியின் பெலத்திலே வேத சத்தியங்கள் உங்கள் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் இருதயத்தில் இருக்குமளவு தியானிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

2 கொரி 3:4-5

தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது

                    நம் நாட்டு காவல் அதிகாரிகள் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள்தான். ஆனாலும் சாலையில் அவர்கள் நிறுத்தும்படி சைகைக் காட்டினால் எவ்வளவு பெரிய வாகனமானாலும் அவர்கள் சைகைக்குக் கட்டுப்பட்டு நிற்கும்.  இது எப்படி சாத்தியம்? நமது அரசாங்கம் அவர்களைக் காவலர் என்று தகுதி படுத்தி, தம்மைவிட வலிமை மிக்க வாகனங்களையும் நிறுத்தும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. அதே போல் இயேசுவின் வழியைப் பின்பற்றும் நம்மை, தேவனே தகுதி படுத்தி, மிகுந்த அதிகாரத்தை நமக்குத் தந்துள்ளார்.  தேவனுக்காக ஊழியம் செய்கிறீர்கள் என்றால் பாதாளத்தின் வாசல்களும் மேற்கொள்ளக் கூடாத வல்லமை உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் உண்டு (மத் 16:18).  இல்லை, நான் ‘சாதாரண கிறிஸ்தவன் தான்’ என்கிறீர்களா?  கிறிஸ்துவை மரித்தோரிடத்திலிருந்து உயிர்ப்பித்த பரிசுத்த ஆவியானவர் உங்களில் செயல்படுகிறார் (ரோமர் 6:10-11). உங்கள் ஜெபத்தினால் அற்புதங்கள் நடக்கும். பேய்கள் ஓடிப் போகும். இயேசுவைக் காட்டிலும் பெரிய காரியங்களைச் செய்ய வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை வேதாகமத்தில் பார்க்கிறோம் (யோவான் 14:12).  எப்படி? உங்கள் பெலத்தினால் அல்ல. நம் தேவன் தரும் அதிகாரத்தினால் தான். இந்த உண்மையை உணராமல் முடங்கி வாழ்ந்த வாழ்க்கை போதும். எழுந்து தேவனுக்காக வல்லமையாய் செயல்படுவோமாக. 

ஜெபம்:

சர்வ வல்ல தேவனே, நீர் எனக்குத் தந்திருக்கும் தகுதிக்காகவும், அதிகாரத்திற்காகவும் நன்றி. அதற்கு உகந்தவனாய் செயல்பட எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்.