காலைத் தியானம் – நவம்பர் 21, 2023

கலா 3:19-25

அப்படியானால் நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன?

                    எல்லாமே விசுவாசமும் கிருபையும் என்றால் நியாயப்பிரமாணத்தின் அவசியமென்ன? என்ன காரணத்திற்காக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது? பவுல் இரண்டு விளக்கங்களைக் கொடுக்கிறார். வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்டது (லூக்கா 1: 54; ரோமர் 4: 13, 16). இங்கு சந்ததி என்று ஒருமையில் சொல்லப்பட்டிருப்பது கிறிஸ்துவே என்று பவுல் சொல்லுகிறார் (கலா 3:16). வாக்குத்தத்தத்தின் சந்ததியாகிய கிறிஸ்து பூமிக்கு வருமளவும், இடைப்பட்ட காலத்தில், அக்கிரமங்களின் மிகுதியால், மனிதர் நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல்பண்ணப்படும்படி, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.  ஆகையால் தான் இயேசுகிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில், நியாயப்பிரமாணத்தை அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் என்று சொல்லுகிறார் (மத்தேயு 5:17). இரண்டாவதாக நம்முடைய பரிதாபமான பாவ நிலையை உணர வைத்து, நம்மைக் கிறிஸ்துவுனிடத்தில் வழிநடத்துவதற்காக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது (வசனம் 24).     

ஜெபம்:

என் இரட்சகராகிய இயேசுவே, என்னைக் கழுவி சுத்தப்படுத்த உம்மால் மாத்திரமே கூடும். அனுதினமும் என்னை சுத்தமாகக் காத்துக்கொள்ளும். ஆமென்.