Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 02, 2026

சங்கீதம் 17:1–15 

“உலகமா? உன்னதமா?” 

தாவீது சவுலின் அரண்மனையில் இருந்தபோது, அவனைச் சுற்றிலும் இருந்தவர்கள் செல்வத்திலும் சுகபோகத்திலும் திளைத்திருந்தனர். “இந்தத் தாவீது ஏன் தேவபக்தி என்று இப்படி அலைகிறான்? நம்மைப் போல உலகத்தை அனுபவிக்கலாமே?” என்று அவர்கள் ஏளனம் செய்திருக்கக்கூடும். உலகத்தின் கவர்ச்சிக்கும், தேவபக்தியின் வைராக்கியத்திற்கும் இடையே நடந்த அந்த மனப்போராட்டத்தின் வெளிப்பாடே இப்பாடல். 

நம்மில் அநேகருக்கு ஒரு மயக்கம் உண்டு. அக்கிரமக்காரர்கள் கொழுத்து வாழ்வதைப் பார்க்கும்போது, “நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்ற கேள்வி நமக்குள் எழும். தாவீதுக்கும் அந்தக் கேள்வி எழுந்தது. ஆனால், அவன் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கண்டுகொண்டான். உலக மனிதர்களோ, “தங்கள் பங்கைப் பெற்றிருக்கிறார்கள்”. அவர்களுடைய ஆஸ்தியும், வயிற்றுப் பிழைப்பும், பிள்ளைச் செல்வமும் இந்த மண்ணோடு முடிந்துவிடும். அது ஒரு கானல் நீர். ஆனால் தாவீதின் திருப்தி எங்கே இருந்தது தெரியுமா? தேவனின் பிரசன்னத்தில் திருப்தியைக் கண்டான். இதுதான் ஒரு பக்தனின் கம்பீரம்! உலகம் தருவது ‘தற்காலிகப் பசி அடங்கல்’; தேவன் தருவதோ ‘நித்திய திருப்தி’. வயிறு நிறைய உண்பதா, அல்லது உள்ளம் நிறைய தேவனைத் தரிசிப்பதா? தாவீது இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தான். அங்கேதான் அவனது வெற்றியின் இரகசியம் ஒளிந்திருந்தது.

ஜெபம்:

பிதாவே, உலகத்தின் மினுமினுப்புகளைக் கண்டு நான் ஏமாந்து போகாதபடி என் கண்களைக் காத்தருளும். ஆமென்.

Exit mobile version