Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 13, 2026

சங்கீதம் 27:1–14

“பிரசன்னம்” 

இருள் சூழ்ந்த வனப்பிரதேசம். எத்திசையும் பகைவர்களின் காலடிச் சத்தம். சவுலின் கண்கள் தாவீதைத் தேடிக்கொண்டிருந்த நேரம் அது. சொந்த பந்தங்களை விட்டுத் தனிமரம் போலத் தாவீது நின்ற அந்தக் காலக்கட்டத்தில் (1 சாமுவேல் 22ன் பின்னணியில்) இப்பாடல் பிறந்திருக்கக்கூடும்.

வீட்டில் மின்சாரம் துண்டித்துக் காரிருள் சூழும்போதெல்லாம், என் பிள்ளைகள் சட்டென்று பெற்றோராகிய எங்களைத் தேடி ஓடி வருவார்கள். எங்களைப் பற்றிக்கொண்ட மறுகணமே, அந்த இருளின் பயம் அவர்களை விட்டு விலகிவிடும். இருள் அப்படியேதான் இருக்கும்; ஆனால் பெற்றோரின் பிரசன்னம் அவர்களுக்குத் தைரியம் தரும். தாவீதும் அந்தச் சிறுபிள்ளையைப் போலத்தான்! தன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது என்று உணர்ந்த மாத்திரத்தில், அவன் தேவனின் பிரசன்னத்திற்குள் ஓடி ஒளிந்துகொள்கிறான். இதுதான் தாவீதின் ரகசியம். அவன் கண்கள் பிரச்சனையைப் பார்க்கவில்லை; பிரசன்னத்தைப் பார்த்தன. எப்போது நம் கண்கள் தேவனுடைய அழகில் லயித்துவிடுகிறதோ, அப்போதே பயம் நம்மை விட்டு ஓடிவிடும். புயலுக்கு நடுவேயும் அமைதலாய் அமர்ந்திருக்க, நமக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல; தேவனை மட்டுமே பார்க்கும் ஒற்றைப் பார்வை! 

ஜெபம்:

என் வெளிச்சமானவரே, இருள் என்னைச் சூழும்போதெல்லாம், பயம் என்னை ஆட்கொள்ளாதபடி, என் கண்கள் உம்மை மட்டுமே தரிசிக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

Exit mobile version