Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 24, 2026

சங்கீதம் 108:1–13

“மதிலைத் தாண்டும் நம்பிக்கை” 

தாவீது தனது படைவீரர்களை உற்சாகப்படுத்த எழுதிய வீரப்பாடல் இது. 

எதிரிகள் பலமானவர்கள்; அவர்கள் ஏதோம் போன்ற, அரண்களால் பாதுகாக்கப்பட்ட நகரங்களுக்குள் இருக்கின்றனர். அவர்களை எப்படி எதிர்ப்பது என்று வீரர்கள் மலைத்துப் போய் நின்றிருக்கலாம். ஆனால், தாவீதோ தன் ‘இருதயத்தை’ ஆயத்தப்படுத்துகிறான். அதுவும் எப்படி? வீணையையும் சுரமண்டலத்தையும் எடுத்துக்கொண்டு! விடியற்காலையில் எழுந்து, “தேவனே, உமது கிருபை வானங்களுக்கு மேலானது” என்று பாடித் துதிக்கிறான். இதுதான் தாவீதின் வியூகம். துதிக்கும்போது பயம் ஓடுகிறது; துதிக்கும்போது விசுவாசம் பெருகுகிறது. “தேவனாலே பராக்கிரமம் செய்வோம்” (வசனம் 13) என்ற வாக்கியம் வெற்று முழக்கம் அல்ல. மனித உதவி விருதா என்பதை உணர்ந்த பின் வரும் ஆழமான நம்பிக்கை. நம் முன்னால் இருக்கும் தடைகள் வானளாவ உயர்ந்திருக்கலாம். ஆனால், நம்மை வழிநடத்துபவர் அந்த வானங்களுக்கும் மேலானவர். மதில்களைக் கண்டு மலைக்காதீர்கள்; துதியுங்கள், முன்னேறுங்கள். வெற்றிக்கொடி ஏற்றுவது உங்கள் கை அல்ல; அவர் கை.

ஜெபம்:

வானங்களுக்கு மேலானவரே, என் முன் நிற்கும் அரணான பிரச்சனைகளைக் கண்டு நான் சோர்ந்து போக மாட்டேன். உம்மாலே நான் பராக்கிரமம் செய்ய எனக்குத் தயை செய்தருளும். ஆமென்.

Exit mobile version