Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 29, 2026

சங்கீதம் 118:1–29

“நிராகரிக்கப்பட்ட கல்” 


குருத்தோலை ஞாயிறு

புனித வாரத் தியானங்கள்

லெந்து காலத்தின் சிகரமான புனித வாரத்தில், தாவீதின் வீணை ஒரு வித்தியாசமான ராகத்தை மீட்டுவதை உணர்வீர்கள். தாவீது பாடிய இச்சங்கீதங்கள் காலங்களைக் கடந்து, வரப்போகும் மேசியாவை முன்னறிவித்தன. இந்த ‘மேசியாவின் சங்கீதங்களை’ தியானித்து, சிலுவையின் நிழலில் இளைப்பாறுவோம்.

இது தாவீது தன் வாழ்வின் மேடு பள்ளங்களைத் திரும்பிப் பார்த்துப் பாடிய வெற்றிப் பாடல். 

ஒரு காலத்தில், “இவன் ஆடு மேய்க்கும் பையன்தானே” என்று சொந்தச் சகோதரர்களால் ஒதுக்கப்பட்டவன்; “இவன் ஒரு தெள்ளுப்பூச்சி” என்று ராஜாவால் துரத்தப்பட்டவன். இஸ்ரவேலின் பெரிய மனிதர்களால் தூக்கி எறியப்பட்டவன். ஆனால் தேவன், “கட்டுவோர் ஆகாதென்று தள்ளின கல்லையே மூலைக்கல்லாக்கினார்”. இது மனிதர்களால் ஆனதல்ல; கர்த்தராலே ஆயிற்று! இன்று, எருசலேம் வீதியில் ஒலிக்கும் “ஓசன்னா” முழக்கத்தை உற்றுக்கேளுங்கள். தாவீதின் குமாரனாகிய இயேசுவைக் குறித்துதான் ஜனங்கள் இந்த சங்கீதத்தைப் பாடினார்கள் (மத்தேயு 21:9). தாவீதைப் போலவே, இயேசுவும் மனிதர்களால் நிராகரிக்கப்படப் போகிறார்; சிலுவையில் அறையப்படப் போகிறார். ஆனால், அந்த நிராகரிப்புதான் உலகிற்கே இரட்சிப்பு என்னும் மாளிகைக்கு அஸ்திபாரக் கல்லாக மாறப்போகிறது.

ஜெபம்:

ராஜாதி ராஜாவே, மனிதர்கள் என்னைத் தள்ளும் போது, நீர் என்னைத் தாங்கும் தெய்வம் என்று நினைவுகூருகிறேன். உம் கிருபைக்காக நன்றி. உம் அரவணைப்புக்காக நன்றி. ஆமென்.

Exit mobile version