ஞாயிறு கண்ணீரில் நனைந்த கிரீடம்!
19-04-2026
2 சாமுவேல் 18:19–33
கோட்டை வாசலில் தவிப்பு! போர்க்களத்திலிருந்து வெற்றிச் செய்தி வருகிறது. ஆனால் சிம்மாசனத்தைக் காத்த பராக்கிரமசாலியின் காதுகள் அந்த வெற்றியின் முழக்கத்தைத் தேடவில்லை; அவன் இதயம் தன் மகனின் சுகத்தையே யாசித்தது. அரியணையைப் பறிக்க வந்தவன்தான், தாவீதைக் கொல்லத் துணிந்தவன்தான் —ஆனாலும் அப்சலோம் தன் சொந்த இரத்தம்! அப்சலோம் மாண்ட செய்தி வந்ததும் சக்கரவர்த்தி சுக்குநூறாய் உடைகிறான்; “என் மகனே, உனக்குப் பதிலாக நான் மாண்டிருக்கக் கூடாதா?” என்று உப்பரிகையில் கதறுகிறான். என்னவொரு முரண்பாடு! வாள் முனையில் வென்ற மாவீரன், பாசத்தின் பிடியில் தோற்றுப்போய்க் கண்ணீர் வடிக்கிறான். நீதியின்படி அப்சலோமின் மரணம் நியாயமே; ஆனால் தகப்பனின் அன்போ, அத்தண்டனையைத் தானே ஏற்கத் துடிக்கிறது. இங்கே தாவீதின் கண்ணீரில் பரலோகத்தின் அன்பைக் காண்கிறோம். நாமும் தேவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த அப்சலோம்களே! தாவீதின் ஏக்கம் வெறும் கதறலோடு முடிந்தது; இயேசுவோ அதைச் சிலுவையில் நிஜமாக்கினார். துரோகியான உனக்காக மெய்யான ராஜா தன்னுயிரையே ஈடாகத் தந்தார்; அந்த உன்னத அன்பை நீ அறிவாயா?
ஜெபம்: என் ஆத்தும நேசரே, துரோகியான எனக்காக உமது சொந்த ஜீவனையே கல்வாரியில் ஈடாகத் தந்த உமது அன்பை எண்ணித் துதிக்கிறேன். அந்த நிபந்தனையற்ற அன்பினை வாழ்நாள் முழுதும் பிறரிடம் பகிர எனக்குக் கிருபை தாரும். ஆமென்.