Site icon Puthuyir

காலைத் தியானம் – ஏப்ரல் 28, 2026

செவ்வாய்                ஸ்தோத்திர பலி

28-04-2026

2 சாமுவேல் 24:18–25

பேரழிவின் முடிவு! எருசலேமின் சங்காரத்தைத் தடுத்து நிறுத்த, அர்வனாவின் களத்தில் பலிபீடம் கட்டச் சொல்கிறார் தேவன். அர்வனா ஒரு அந்நியன்; ஆயினும், மாமன்னனைக் கண்டதும் தன் களத்தையும், பலியிட மாடுகளையும் இலவசமாகக் காணிக்கையாக்க முன்வருகிறான். ஆனால் தாவீது அதைத் திட்டவட்டமாக மறுக்கிறான்! என்னவொரு மாற்றம்! அன்று உப்பரிகையில், பிறனின் மனைவியைத் தன் அதிகாரத்தால் எவ்விதக் கிரயமுமின்றி அபகரித்த அதே சக்கரவர்த்தி, இன்று ஒரு எளியவனின் களத்தை இலவசமாக ஏற்கத் தயங்குகிறான். பாவத்தின் ஆழத்தையும் தேவ கிருபையின் மேன்மையையும் உணர்ந்தவனுக்குத்தான் தியாகத்தின் மதிப்பு புரியும். காசு கொடுத்து வாங்கிய இடத்தில்தான் பலி செலுத்தப்பட்டது. இன்று உங்கள் ஆராதனை எப்படிப்பட்டதாய் இருக்கிறது? நேரமும் வசதியும் மிஞ்சும்போது மட்டும் தேவனுக்குக் கொடுப்பது பலியாகாது. உங்களுக்குச் செலவில்லாத, தியாகமில்லாத எந்த வழிபாட்டையும் பரலோகம் ஒருபோதும் ஏற்காது. உண்மையான தியாகத்துடன் கொடுக்கப்படும் ஆராதனையே பரலோகத்தின்  கவனத்தை ஈர்க்கிறது!

ஜெபம்: பரிசுத்த தேவனே, என் நேரத்தையும், முழு உள்ளத்தையும் கிரயமாகச் செலுத்தி உம்மை உண்மையாய்த் துதிக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

Exit mobile version