திங்கள் பொன்மாளிகையில் பெருமூச்சு!
01-06-2026
பிரசங்கி 2:1–11
தகிக்கும் இதய தாகம்! “என்னிடம் மட்டும் செல்வம் குவிந்தால் …” என்று நான் சிந்தை குளிர்ந்த நாட்கள் பல உண்டு. ஆனால், உலகத்தின் உச்சக்கட்ட இன்பங்களைச் சுவைத்தால் இதயம் நிறைந்துவிடுமா? இதோ, இஸ்ரவேலின் மகாராஜா தன் இச்சைகளுக்கெல்லாம் கடிவாளம் தளர்த்துகிறான். தேவனுக்கு ஆலயம் கட்டிய அதே கரங்கள், இப்போது தன் மாம்சத்தைத் திருப்திப்படுத்த பிரம்மாண்டமான சோலைகளையும் மாளிகைகளையும் எழுப்புகின்றன. அந்தப்புரத்து அழகிகள், மலைபோல் குவியும் பொக்கிஷங்கள் என எதையும் அவனது கண்கள் விலக்கவில்லை. உலகமே அவனது காலடியில் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஆனால், ஆசைகளின் உச்சியிலிருந்து தன் சாம்ராஜ்யத்தைக் குனிந்து பார்க்கும்போது, அங்கே ஒரு கொடிய வெற்றிடம் வாய் பிளந்து நிற்கிறது! பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்த மகா ஞானியால், தன் சொந்த ஆத்துமாவின் தாகத்தைத் தீர்க்க முடியவில்லை. சிருஷ்டிகரை விலக்கிவிட்டுச் சிருஷ்டிப்பில் நீ தேடும் எந்த இன்பமும் வெறும் மாயையே! மனிதராகப் பிறந்தவர் ஒவ்வொருவரின் ஆத்துமாவிலும் தேவனுடைய வடிவத்தில் ஒரு வெற்றிடம் உண்டு; அதை இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பினால் மட்டுமே நிரப்ப முடியும்!
ஜெபம்: சர்வவல்லவரே, என் உள்ளத்தின் வெற்றிடத்தை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் என் ஆத்துமாவைத் திருப்தியாக்கி என்றென்றும் என்னை வழிநடத்தியருளும், ஆமென்.