Site icon Puthuyir

காலைத் தியானம் – ஜூன் 08, 2026

திங்கள்                               வஞ்சிக்கப்பட்ட விசுவாசம்!

08-06-2026

1 இராஜாக்கள் 13:11–34

சதிக் கொடியின் நிழல்! அரசனின் அழைப்பையே அலட்சியம் செய்துவிட்டு, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கம்பீரமாய் வீடு திரும்புகிறான் யூதாவின் தீர்க்கதரிசி. ஆனால், வழியில் ஒரு முதியவன் வந்து, நயவஞ்சகமாய் ஒரு பொய்யை வீசுகிறான். இராஜாவின் அதிகாரத்திற்கு வளைந்துகொடாத பராக்கிரமசாலி, ஒரு சக தீர்க்கதரிசியின் ‘ஆன்மீகப் போர்வையில்’ மறைந்திருந்த பொய்க்கு எளிதாய் இரையாகிறான்! தேவனுடைய தெளிவான கட்டளையைவிட, மனிதன் கூறும் ‘தேவதூதனின் தரிசனத்தை’ நம்பி, தன் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறான். முடிவில், ஒரு சிங்கம் அவனை வழியிலே மாய்க்கிறது. என்னவொரு துயரம்! தேவனுடைய வார்த்தை உனக்குத் தெளிவான பாதையைக் காட்டும்போது, வேறு எவருடைய ‘தீர்க்கதரிசனமோ’ அல்லது ‘தரிசனமோ’ உன்னைத் திசைதிருப்ப அனுமதிக்காதே. இதையே, ‘இயேசு நேசித்த சீடனாகிய’ யோவான் தன் முதிர்வயதில், “எல்லா ஆவிகளையும் நம்பாமல், அவை தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1 யோவான் 4:1) என்று அன்போடு எச்சரிக்கிறார். மனித தரிசனங்களை அல்ல, தேவனுடைய மாறாத வேதவார்த்தையை மட்டுமே உன் ஒரே அளவுகோலாகப் பற்றிக்கொள்; அது உன்னை எந்த வஞ்சகத்திலிருந்தும் தப்புவித்து என்றென்றும் பத்திரமாய் வழிநடத்தும்!

ஜெபம்: சர்வவல்லவரே, மனிதர்களின் போலி ஆன்மீக அனுபவங்களைக் கண்டு மயங்காமல், ஆவிகளைச் சோதித்தறியும் விவேகத்தை எனக்குத் தாரும். உம்மில் மட்டுமே என் விசுவாசத்தை வேரூன்றச் செய்து, என்னை என்றென்றும் பத்திரமாய் வழிநடத்தியருளும். ஆமென்.

Exit mobile version