Site icon Puthuyir

காலைத் தியானம் – ஜூன் 20, 2026

சனி                            பாகாலின் கோட்டையில் சவால்!

20-06-2026

1 இராஜாக்கள் 17:8-16

வறண்ட சாறிபாத்! சீதோன் தேசத்து சாறிபாத் சாதாரண ஊரல்ல; இஸ்ரவேலைச் சூறையாடிய கொடிய யெசபேலின் பூர்வீகம்! மழையையும் செழிப்பையும் தருவதாக நம்பப்பட்ட பாகாலின் இருப்பிடம். ஆனால் அங்கே என்ன நடக்கிறது? பாகாலைத் தொழும் அதே மண்ணில்தான், ஒரு ஏழை விதவை தன் கடைசிப் பிடி மாவோடு சாகக் காத்திருக்கிறாள்! பாகாலின் வஞ்சகம் அவனது சொந்த முற்றத்திலேயே நிர்வாணமாக்கப்படுகிறது. மழையைத் தரமுடியாத அந்த உயிரற்ற விக்கிரகத்தின் கோட்டைக்குள், ஜீவனுள்ள தேவன் தமது தீர்க்கதரிசியை அனுப்புகிறார். சத்துருவின் கோட்டைக்குள் நுழைந்து, ஒரு ஏழைத் தாயின் மாவு வைத்திருக்கும் பானையை மூன்றரை வருடங்கள் வற்றாமல் காக்கிறார் ஜீவனுள்ள தேவன்! உலகத்தின் சித்தாந்தங்களும், மனிதன் நம்பியிருக்கும் நவீனக் கலாச்சாரப் பெருமைகளும் ஒருநாள் கானல் நீர்போல வறண்டுபோகும். தகிக்கும் பஞ்சத்தின் நடுவே அந்தப் போலி விக்கிரகங்கள் உன்னைக் கைவிடும். உன்னைச் சுற்றியுள்ள உலகம் புகழும் மாயையான சித்தாந்தங்களில் ஒருபோதும் மயங்காதே; உன் வாழ்வை ஜீவனுள்ள இயேசு கிறிஸ்துவிடம் மட்டுமே அர்ப்பணித்தால், அவர் எப்பேர்ப்பட்ட வறட்சியிலும் உன்னைச் செழிப்பாய் நடத்துவார்!

ஜெபம்: சர்வவல்லவரே, இந்த உலகம் நம்பும் மாயையான சித்தாந்தங்களிலும் கலாச்சாரங்களிலும் மயங்கிவிடாதபடி என்னைக் காத்தருளும். என்னைப் போஷிக்கும் ஜீவனுள்ள தேவனாகிய உம்மண்டை மட்டுமே என் வாழ்வை முழுமையாய் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

Exit mobile version