Site icon Puthuyir

காலைத் தியானம் – ஜூன் 25, 2026

வியாழன்                                 சூரைச்செடியின் நிழலில்!

25-06-2026

1 இராஜாக்கள் 19:1–8

கர்மேல் மலையில் பாகாலின் பூசாரிகளைச் சிரம் கொய்து, தன் ஒற்றை ஜெபத்தால் வானத்தையே பூட்டித் திறந்த பராக்கிரமசாலி எலியா! ஆனால் இன்று, யெசபேல் என்ற கொடிய அரசியின் ஒரே மிரட்டலுக்கு அஞ்சி, தலைதெறிக்க ஓடுகிறான். ஒரு சூரைச்செடியின் நிழலில் அமர்ந்து, “நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல” என்று தன்னைத்தானே நொந்துகொண்டு, மரணத்திற்காகக் கதறுகிறான். மாபெரும் வெற்றிகளைக் குவித்த ஆத்துமாவில் சோர்வும் மனஅழுத்தமும் (Depression) எவ்வளவு ஆழமாய்ப் பதுங்கியிருந்தன! ஆனால், தேவன் அவனைப் புறக்கணிக்கவில்லை; அவனது பலவீனத்தைக் கண்டு அவனைக்   கடிந்துகொள்ளவுமில்லை. மாறாக, வனாந்தரத்தின் தகிப்பில் அவனுக்கு இளைப்பாறுதலைத் தந்து, தேவதூதன் மூலம் அப்பத்தையும் தண்ணீரையும் பரிமாறுகிறார்! அந்த அப்பமும் தண்ணீரும், பிற்காலத்தில் நமக்காக முறிக்கப்படவிருந்த இயேசுவின் சரீரத்திற்கும் இரத்தத்திற்கும் நிழலோட்டமாய் அமைந்தன. சோர்வின் உச்சியில் நீ மரணத்தை விரும்பினாலும், உன் அறியாமையின் ஜெபங்களுக்குப் பதில் தராமல், உன்னைத் தேற்றிப் போஷிக்கும் தேவனுடைய அளவற்ற கிருபையே உன்னை என்றென்றும் தாங்கி நடத்தும்!

ஜெபம்: கிருபை நிறைந்தவரே, என் சோர்வின் பள்ளத்தாக்குகளில் உமது அன்பினால் என்னைப் போஷித்துத் தேற்றுவதற்காக நன்றி. உமது சரீரமும் இரத்தமுமாகிய திருவிருந்தினால் பலப்பட்டு, என் ஜீவ பயணத்தை நான் ஜெயமாய்த் தொடர எனக்குப் பெலன் தாரும். ஆமென்.

Exit mobile version