Site icon Puthuyir

காலைத் தியானம் – நவம்பர் 03, 2026


செவ்வாய்                                 சட்டம் அணிந்த அநீதி

03-11-2026
தானியேல்
6:1–28


தானியேலிடம் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் பணியில் நேர்மையும் பொறுப்பும் இருந்தன. ஆகவே எதிரிகள் அவனிடம் தவறைத் தேடவில்லை; அவனைத் தண்டிக்க ஒரு சட்டத்தை உருவாக்கினார்கள். அரசனின் பெருமையைத் தூண்டி, ஜெபத்தையே குற்றமாக்கினார்கள். அந்த புதிய சட்டத்தில் நீதியின் உள்ளடக்கம் இல்லை. அரசனே தன் அரசாணையின் பிடியில் சிக்கிக்கொண்டான். தானியேல் புதிய சட்டத்தை எதிர்த்து சண்டை தொடங்கவில்லை. வழக்கம்போல் ஜெபித்தான். அவன் வழிபாடு ஒரு அரசியல் நாடகம் அல்ல; பல ஆண்டுகளாக தேவனுடன் வளர்த்த உறவின் வெளிப்பாடு. தேவன் அவனைச் சிங்கங்களிடமிருந்து காத்தார். அதன்மூலம் பொய்க்குற்றச்சாட்டுக்கு முடிவும் கொண்டு வந்தார்.
இன்றும் ஒரு காரியம் நியாயமாகத் தோன்றலாம்; அதைச் செயல்படுத்தும் நோக்கம் அநியாயமாக இருக்கலாம். குடும்பத்தில், பணியிடத்தில், சபையில் நாம் விதிகளை யாருக்காகப் பயன்படுத்துகிறோம்? பலவீனரைப் பாதுகாக்கவா, பிடிக்காதவரை ஒதுக்கவா? ஒவ்வொரு தீர்மானத்திற்கும் முன் அதன் விளைவைச் சிந்திப்போம். நமது மனசாட்சி தேவனுடைய நீதியால் வழிநடத்தப்படட்டும். நீதியால் கட்டுப்படுத்தப்படும் அதிகாரமே மனிதர்களுக்குப் பாதுகாப்பாக மாறும்.


ஜெபம்: நீதியின் தேவனே, எப்பொழுதும் மனிதர்களின் கண்ணியத்தையும் நீதியையும் காக்கும் விவேகத்தை எனக்குத் தாரும். அழுத்தங்களின் நடுவிலும் நேர்மையாக நடக்க உதவி செய்தருளும். ஆமென்.

Exit mobile version