காலைத் தியானம் – ஜனவரி 27, 2023

நீதி 27: 1 – 2  

தற்புகழ்ச்சி வேண்டாம்                  

                           நம்மில் சிலர் நம்முடைய தயாளத்தைக் குறித்தும், சிலர் நம்முடைய நற்குணங்களைக் குறித்தும், இன்னும் சிலர் நம்முடைய தாலந்துகளைக் குறித்தும் மேன்மைபாராட்டிக் கொள்கிறோம். சில நேரம் நம்மை நாமே மற்றவர்களோடு ஒப்பிட்டு, நாம் அதில் எவ்வளவு நல்லவர்கள் என்று பேசிக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய வாய் அல்ல, மற்றவர்களே நம்மைப் புகழவேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அழகாக கற்றுக்கொடுக்கிறது. தற்புகழ்ச்சி நல்லதல்ல. மற்றவர்கள் நம்முடைய செய்கைகளைக் கண்டு அவைகள் சரியானவைகளாக இருக்கும்பொழுது, மேன்மையான செய்கைகளாக இருக்கும்பொழுது,  தாமாகவே பாராட்டி பேசுவார்கள். அதுதான் நமக்கு அழகே அன்றி, நாமே நம்மைப் புகழுவது நமக்கு அழகல்ல. அது மற்றவர்கள் நம்மைத் தூற்றும்படி ஆகிவிடும்.  கர்த்தரின் பிள்ளைகள் தங்களைக் குறித்து அல்ல கிறிஸ்துவைக் குறித்தும், அவரது சிலுவையைக் குறித்துமே மேன்மைபாராட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். அதுதான் கர்தரின் பிள்ளைகளுடைய மேன்மையாய் இருக்கிறது.       

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, நான் தற்புகழ்ச்சியை நாடாமல் எப்பொழுதும் உம்மைக் குறித்தே மேன்மைபாராட்ட எனக்கு உதவிசெய்யும். என் செய்கைகள் உமக்குப் புகழ்ச்சி உண்டுபண்ணுகிறவைகளாக இருக்கட்டும். ஆமென்.