காலைத் தியானம் – மே 07, 2022

மாற்கு 9: 9 – 18

எலியா முந்தி வரவேண்டும்              

                             இப்போது பல காரியங்களைக் குறித்து சீடர்களுக்கு தெளிவு வந்துவிட்டது. மேசியாவாகிய இயேசு கிறிஸ்து பூமியில் அனுபவிக்க வேண்டிய பாடுகளும் மரணமும், அதற்குப் பின் அவர் மகிமையிலே பிதாவோடும் மற்ற விசுவாசிகளோடும் இருக்கப் போவதையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கு ஒரு விஷயத்தில் தெளிவில்லை. மல்கியா 3:1; 4: 5-6 ஆகிய வசனங்களைப் பார்க்கும்போது எலியா மேசியாவுக்கு முன் வரவேண்டும் என்று எழுதியிருக்கிறதே, அது சரியென்றால் எலியா வந்தும் மக்கள் அவரைக் கவனிக்கத் தவறி விட்டார்களா அல்லது எலியா இனிமேல்தான் வர வேண்டுமா? இதுதான் அவர்களுடைய மனதிலிருந்த கேள்வி. எலியா வந்தாயிற்று என்று இயேசு சொன்னார். அவர் யோவான் ஸ்நானனைத்தான் எலியா என்று குறிப்பிட்டார்.  யோவான் தான் எலியாவா என்பது முக்கியமில்லை. யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி வந்தான் என்பதுதான் முக்கியம். யோவான் என்ன பிரசங்கித்தான் என்பதுதான் அதைவிட முக்கியம். இப்பொழுதும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன் மக்களுடைய மனந்திரும்புதலுக்கு பல தருணங்கள் கொடுக்கப்படுகின்றன. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்வோமாக.

ஜெபம்:

ஆண்டவரே, உம்மை அறியாமல் இன்னும் பாவத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களை மீட்டெடுக்க என்னையும் ஒரு எலியாவாக, யோவானாக உபயோகித்தருளும். ஆமென்.