காலைத் தியானம் – நவம்பர் 01, 2026

ஞாயிறு                         சிறையிலிருந்து அரசனின் மேசைக்கு

01-11-2026

2 இராஜாக்கள் 25:22–30


எருசலேம் இடிந்தது. மீதமிருந்த மக்களும் கெதலியாவின் கொலைக்குப் பிறகு பயந்து எகிப்துக்குச் சென்றனர். வரலாறு இங்கே இருளில் முடிந்திருக்கலாம். ஆனால் வேதாகமம் பாபிலோனின் சிறைக்கதவை நோக்கித் திரும்புகிறது. முப்பத்தேழு ஆண்டுகளாகச் சிறையில் இருந்த யோயாக்கீன் விடுவிக்கப்படுகிறான். இழந்த அரியணை திரும்பவில்லை. கடந்த காலத்தின் காயங்களும் அழியவில்லை. இருந்தும் அவனுக்கு மரியாதையான இடமும் வாழ்நாள் முழுவதும் உணவும் வழங்கப்படுகின்றன. இச்சிறு சம்பவம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மறக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. யூதாவின் அரசாட்சி மீளவில்லை; தாவீதின் வம்சம் மறைந்துவிடவும் இல்லை.
இங்கே நமக்கொரு கேள்வி எழுகிறது. ஒருவரின் தோல்வியே அவருடைய நிரந்தர அடையாளமா? இல்லவே இல்லை!  இயேசு கிறிஸ்துவின் சிலுவை வல்லமை, நம் எதிர்காலத்தை ஜெயத்துடன் வாழச் செய்கிறது. கிறிஸ்து நமக்குத் தம்முடைய கிருபையை அளித்தது போலவே, நாமும் பிறருக்கு அதனைக் காட்ட அழைக்கப்படுகிறோம். கிருபை காட்டுவது என்பது கடந்த காலத்தை முற்றிலும் மறந்துவிடும் மறதி அல்ல; மாறாக, அந்தக் கடந்த காலத்தையும் தாண்டி ஒருவரைக் கண்ணியத்துடன் நடத்துவதாகும். மனம்திறந்த உரையாடல், மரியாதையான வரவேற்பு, மீண்டும் தரப்படும் வாய்ப்பு — இவையே கிருபையின் நடைமுறை வடிவங்கள். தேவன் மனிதனை அவன் மிகத் தாழ்ந்த நிலையில் விட்டு விடவில்லை. கிருபை கடந்ததை மறுக்காது; மாறாக, ஒருவரின் புதிய எதிர்காலத்திற்கு மீண்டும் கதவைத் திறக்கும்.

ஜெபம்: கர்த்தாவே, பிறரை அவர்களின் கடந்த காலத்தின் கண்ணோட்டத்தில் இல்லாமல், கண்ணியத்துடனும், கிருபையுடனும் நடத்த உதவியருளும். பிறரை உம் கண்ணோட்டத்தில் காணச் செய்தருளும். ஆமென்.