காலைத் தியானம் – மே 03, 2026

ஞாயிறு                                       தகுதியற்ற கிருபை!

03-05-2026

1 இராஜாக்கள் 1:32–53

சிம்மாசனமா? பலிபீடமா! நேற்று வரை மகுடத்தைக் கனவு கண்ட அதோனியா, இன்று பலிபீடத்தின் கொம்புகளை இறுகப் பிடித்துக்கொண்டு மரண பயத்தில் நடுங்குகிறான். தன்னை ராஜாவாக அறிவித்தவனின் நாக்கு, இப்போது உயிருக்காகப் பிச்சை கேட்கிறது. அவனோடு மதுவருந்திய பராக்கிரமசாலிகள் அனைவரும் ஆளுக்கொரு திசையாய் சிதறி ஓடிவிட்டனர். என்னவொரு அவலம்! அரியணையை அபகரிக்க நினைத்த வஞ்சகம் தோற்றது. ஆனால், நியாயத்தீர்ப்பின் வாளை உருவ வேண்டிய சாலொமோன், தன் முதல் நாளிலேயே எதிரிக்கு இரக்கத்தின் கரத்தை நீட்டுகிறான். அநீதியாய் ராஜ்யத்தைத் தேடியவனுக்கு, தகுதியற்ற கிருபை கிடைக்கிறது. மனித முயற்சியில் ஆடப்படும் ஆட்டம் மரணத்தில் முடியும்; ஆனால், தேவனுடைய பலிபீடம் நித்திய அடைக்கலம் தரும். தமது மரணத் தருவாயிலும் கள்ளனுக்குக் கிருபை பாராட்டிய தேவன் நமக்குண்டு. உன் சொந்த பலத்தால் வாழ்வதை விட, பலிபீடத்தின் நிழலில் சரணடைவதே மெய்யான பாதுகாப்பு!

ஜெபம்: கிருபை நிறைந்தவரே, என் தவறுகளுக்குத் தக்க என்னைத் தண்டிக்காமல், உமது பலிபீடத்தின் நிழலில் எனக்குப் புகலிடம் அளித்த உமது கிருபைக்காக நன்றி. உமது இரக்கத்தின் பாதங்களில் சரணடைகிறேன். என்னை ஏற்றுக்கொண்டு இன்றும் என்றும்  வழிநடத்தியருளும். ஆமென்.