காலைத் தியானம் – ஏப்ரல் 02, 2022

மாற்கு 1: 14 – 22

என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்

                             மீன்கள் வலையில் சிக்கிக்கொள்வதைப் போல எப்படி மனிதரை சிக்க வைக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து சொல்லவில்லை. எதை உண்போம், எதை உடுத்துவோம் என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, மனிதரின் ஆத்துமாக்களைக் குறித்து கவலைப்படுங்கள் என்று அவர் சொல்லுகிறார். இவ்வுலகின் தேவைகளுக்காக உழைப்பதை விட்டுவிட்டு அதைவிட மிகவும் மேலான, முக்கியமான ஒரு வேலையான ஆத்துமாக்களை மீட்கும் பணியில் ஈடுபடுங்கள் என்று இயேசு சொல்லுகிறார். இது மிகப் பெரிய பதவி உயர்வு. என் பின்னே வாருங்கள் என்ற இயேசுவின் அழைப்பிற்கு சீடர்கள் உடனடியாகக் கீழ்ப்படிந்ததால், இந்த பதவி உயர்வு கிடைத்தது.  இன்றும் இயேசுவின் அழைப்பு நம் காதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் எத்தனை பேர்? நற்செய்தியை அறிவிப்பதற்காக நம் சபைகளில் ஒதுக்கி வைக்கும் பணம் (budget) எவ்வளவு? திருச்சபை கமிற்றிகளில் உறுப்பினராவதற்கு அநேகர் போட்டியிடுகிறார்கள் அல்லவா? அதேசமயம் நற்செய்தியை அறிவிக்க நம் சபைகளில் போட்டியிடுபவர்கள் எத்தனை பேர்?  என் பின்னே வாருங்கள் என்ற அழைப்பு உனக்குக் கேட்கிறதா?

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அழைப்புக்குக் கீழ்ப்படிய எனக்கு  மன உறுதியைத் தாரும். என் நேரத்தையும் பணத்தையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.